திருமணம் செய்ய ஒருவருக்கு குரு பலன் எப்போது வரும் – When a Person will Get Guru Palan for Marriage

When a Person will Get Guru Palan for Marriage

ஒருவருக்கு திருமணம் நடக்க அவர் ஜாதகப்படி குருபலன் வர வேண்டும் என்பார்கள். திருமணம் செய்ய ஒருவருக்கு குரு பலன் எப்போது வரும் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஜோதிட அறிவியலில் குருபகவான் மிக சக்திவாய்ந்த நன்மைகளையே பெருமளவில் வாரி வழங்கும் ஒரு முழுமையான சுபகிரகமாவார். காலச்சக்கரத்தில் தேவர்களின் குருவான பிரகஸ்பதி 9-ஆம் வீடான தனுசு ராசிக்கும் 12-ஆம் வீடான மீன ராசிக்கும் அதிபதியாவார். கடக ராசியில் உச்சமடையும் அவர் சனீஸ்வரனின் வீடான மகர ராசியில் நீச்சமடைவார்.

நம் ஜாதகத்தில் எவ்வளவு அதிர்ஷ்டமான யோகங்கள் இருந்தாலும், சிறப்பான நிலையில் மற்ற கிரக நிலைகள் அமைந்தாலும் குருபகவானின் அருள் இல்லாமல் அவை முழுமையடையாது. குருபகவானே அனைத்து நல்லொழுக்கங்களுக்கும் அதிபதி. உண்மை, தர்மம், ஆன்மிகம், கல்வி, ஞானம் போன்ற அனைத்திற்கும் காரகன் அவரே.

When a Person will Get Guru Palan for Marriage Madipakkam Astrologer Sayeeram

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினமான ஒன்றாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்தால் அந்த ஜாதகரை போல அதிர்ஷ்டசாலி அவரைச் சுற்றி யாரும் இருக்க மாட்டார்கள். அவர் வாழ்வில் சந்திக்கும் அனைத்து தடைகளையும் குருவருளால் தாண்டி இந்த பிறப்பின் உன்னத நோக்கங்களை எளிதில் அடைவார். மற்ற எந்த கிரக தோஷங்களோ, சாபங்களோ அவரை பெரிதளவில் பாதிக்காது.

ஒருவர் ஒரு ஜாதகத்தில் குருவின் திருவருள் பரிபூரணமாகக் இருந்தால் அந்த ஜாதகர், சிறப்பான வேலை, லாபகரமான தொழில், உயர்கல்வி, அமைதியான இல்லற வாழ்க்கை, நல்ல குழந்தை செல்வம், நோயற்ற வாழ்வு, வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார வளம் என அனைத்தையும் எந்த குறையுமில்லாமல் தருவார். நம் ஜாதகத்தில் குருவின் அருளால் சந்தோஷமான வாழ்க்கை நமக்கு அமைந்தால், அந்த சந்தோஷம் நமக்கு நல்ல வழிகளின் மூலமாகவே கிடைக்கும். நம் வாழ்க்கை சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைகளின் படியே அமையும்.

குருபலன் என்பது நமக்கு குருபகவானின் திருவருள் முழுமையாக கிடைக்கும் நேரம். ஒவ்வொரு வருடமும் குரு பெயர்ச்சியின் போது குருபகவான் நம் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் அமர்ந்தால் அந்த காலகட்டத்தில் நமக்கு முழுமையான குருபலன் இருக்கும். அதுபோல குருபகவான் தன் சொந்த ராசிகளான தனுசு, மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெற்று அமரும்போதும், கடக ராசியில் உச்சம் பெறும் போதும் அனைத்து ராசிகளுக்கும், குருபகவானின் அடுத்த பெயர்ச்சி வரை குருபலன் இருக்கும். அத்துடன் குருபகவானின் பார்வைக்கு மிக அதிக அளவு சுப பலமுண்டு. குருபகவான் தன் அமரும் இடத்திலிருந்து 5, 7 மற்றும் 9 ஆம் வீடுகளை பார்ப்பார். குருவின் பார்வைக்கு மிக அதிக சக்தி இருக்கும். அதனால் குரு பார்வை படும் அந்த மூன்று ராசிகளில் பிறந்தவர்களுக்கும், அந்த காலகட்டத்தில் குருபலன் கிடைக்கும்.

குருவின் பார்வை களஸ்திர ஸ்தானத்தில் வரும்போது திருமண வயதில் உள்ளவர்களுக்கு, அந்த காலகட்டத்தில் நிச்சயம் திருமணம் கைகூடிவரும். அதுபோல குருபகவானின் பார்வை புத்திர ஸ்தானத்தில் இருந்தால். அந்த ஜாதகருக்கு அந்த குருபெயர்ச்சி காலத்தில் குழந்தை செல்வம் கிடைக்கும்.

குருபகவான் நீச்சமடைந்து மகர ராசியில் அமரும்போது அந்த இடம் உங்கள் ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடமாக இருந்தாலும் அந்த காலகட்டத்தில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.

அதுபோல குருபகவான் ஒரு ராசிக்கு 4-ஆம் இடத்தில் அமரும் அர்த்தாஷ்டம குரு காலத்திலும், 8-ஆம் இடத்தில் அமரும் அஷ்டம குரு சஞ்சார காலத்திலும் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.

அது போல ஒருவருக்கு அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, அல்லது ஏழரை சனியில் விரய சனி காலகட்டங்களிலும் கோச்சார ரீதியாக அவரின் ராசிக்கு குருபகவான் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் அமர்ந்தாலும் அந்த நேரத்தில் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

ஒருவரின் திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதில் குருபகவானுக்கு பெரும் பங்குள்ளது. அதுபோல குருபகவான் புத்ர காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவரின் குடும்பத்தில் ஆண் வாரிசு உண்டாக குருபகவானின் பலம் முக்கியம். ஒருவருக்கு பெண் குழந்தை யோகம் அவரின் ஜாதகத்தில் உள்ள சுக்கிரனின் நிலையால் தீர்மானிக்கப்படுகிறது.

குருபலன் என்பது ஒரு குருவின் நல் ஆசீர்வாதங்களே. குரு என்பவர் தொலைதூரத்தில் வானமண்டலத்தில் சஞ்சரிக்கும் ஒரு கிரகமல்ல. யாரெல்லாம் நம் மேல் முழு அக்கறையுடன் நம்மை வழிநடத்துகிறார்களோ, அவர்கள் அனைவரும் குருவின் அம்சமே. நம் நலத்தின் உண்மையான அக்கறையுள்ள பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், நமக்கு கல்வி செல்வத்தை தரும் ஆசிரியர்கள், நமக்கு பணி மற்றும் தொழில் நுணுக்கங்களை சொல்லித்தரும் நம்முடன் பணிபுரிபவர்கள். அனைவரும் குருவின் முழுமையான அம்சங்கள் நிறைந்தவர்களே. இவர்களுக்கு நாம் உரிய மரியாதையும், அவர்கள் நமக்காக செய்த நல்ல செயல்களுக்கு தகுந்த அங்கீகாரத்தையும், மனமார்ந்த நன்றிக்கடனையும் செலுத்தினால், நம் வாழ்வில் குருவினால் ஏற்படும் பலன்கள் பல மடங்காகும்.

நம் வாழ்க்கை வளம் பெற, முழுமையாக குருவின் திருவருளை பெற நாம் ஒருவரை மனதார குருவாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் உங்கள் பெற்றோராக, சகோதர, சகோதரியாக, உங்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியராக, அல்லது நண்பராக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது இறை ஸ்வருபங்களான சாய்பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், காஞ்சி பெரியவர், போன்றவர்களை கூட நாம் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவர்கள் காட்டிய நல்வழிகளின் படி நடந்தால், நம் ஜாதகத்தில் குருவின் பலம் குறைவாக இருந்தாலும், நமக்கு இந்த செயல்களால் குருவின் திருவருள் முழுமையாக கிட்டும்.

ஒரு ஜாதகத்தில் குருவின் அருள் முழுமையாக இல்லாவிட்டால் திருமணம் கால தாமதமாகலாம். அல்லது திருமண வாழ்வில் நிம்மதியின்மையோ, குழந்தை பேறோ கிடைக்காமல் இருக்கலாம். இந்த குறையை சிறந்த தெய்வீக பரிகாரங்களில் மூலமாகவும் குரு ஆராதனைகள் மூலமும் முழுவதும் நிவர்த்தி செய்யலாம்.

குருபலன் நமக்கு போதுமான அளவில் கிடைக்க உதவும் சில தெய்வீகப் பரிகாரங்கள் குறித்து அடுத்த பதிவில் விரிவாக கூறுகிறேன்.

 

When a Person will Get Guru Palan for Marriage Madipakkam Astrologer Sayeeram

 

 

Call Now for Consultation