Are there any Ill-Effects of Child Birth on Amavasya Day ( No Moon Day )
அமாவாசை திதியில் ஒரு குழந்தை பிறப்பது அதன் வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அமாவாசை திதியில் ஒருவர் பிறந்தார் என்றால் அவர் சுத்தமாக அதிர்ஷ்டம் இல்லாதவர் என்றும், வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும், தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்து மிகுந்த மன உளைச்சலுடனே தன் காலத்தை கழிப்பார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை உள்ளது என்றாலும் கூட, அமாவாசை தினத்தன்று முழு நாளும் இது போன்ற எதிர்மறை பலன்களை தராது. அமாவாசை தினத்தன்றும் அதைத் தொடர்ந்து வரும் பிரதமை தினத்தன்றும், ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களில் பிறக்கும் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பாதிப்படையும். அதைக் குறித்து இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.
சந்திரன் வான மண்டலத்தில் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ 2-1/4 நாட்களை எடுத்துக்கொள்ளும். இதன்படி அது 12 ராசிகளையும் கடக்க ஏறக்குறைய 27 நாட்கள் எடுக்கும்.
அதுபோல சூரியன் ஒரு ராசியை கடக்க ஏறக்குறைய முப்பது நாட்களை எடுத்துக்கொள்ளும். அதன்படி ஒரு வருட காலத்தில் சூரியன் 12 ராசிகளிலும் தன் சுழற்சியை நிறைவு செய்யும்.
இதனால் சந்திரன் ஒவ்வொரு மாதமும் ஒரு முறை தன் சுழற்சியில் சூரியன் நிற்கும் ராசியைக் கடந்து செல்லும். சந்திரனும், சூரியனும் ஒரே ராசியில் நிற்கும் நிலையை அமாவாசை தினம் என்றும், அதுவே அவை இரண்டும் 180 டிகிரி தொலைவில் நேர் எதிரே நிற்கும் நிலையை பவுர்ணமி நாள் என்கிறோம்.
ஜோதிட அறிவியலில், நமது 12 ராசிகளை கொண்ட காலச்சக்கரம் மொத்தம் 360 டிகிரியை கொண்டு, ஒவ்வொரு ராசியும் சமமான 30 பாகைகளாக . பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்திரன் சூரியனிடமிருந்து 12 டிகிரி தள்ளி நிற்கும் நேரத்திலிருந்து அமாவாசை திதி தொடங்கும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில், ஒரே பாகையில் நிற்கும்போது அமாவாசை திதி முடிந்து, அதற்கு அடுத்த பிரதமை திதி தொடங்கும். பிரதமை திதி முடியும்போது சந்திரன் 12 டிகிரி சூரியனிலிருந்து தள்ளி நிற்கும்.

ஒவ்வொரு கிரகமும் சில குறிப்பிட்ட பாகையில் தன் சுழற்சியில் சூரியன் அருகே வரும்போது அஸ்தங்கம் அடையும். அஸ்தங்கம் என்பது, ஒரு கிரகம் சூரியனின் பலத்தால் அதனருகே வரும்போது அது பலவீனமடையும் என்பதாகும்.
இதனடிப்படையில், சந்திரன் சூரியனுக்கு முன்னும் பின்னும் 12 டிகிரியில் அஸ்தங்கம் அடையும். அதாவது அமாவாசை திதி தொடங்கும்போது சந்திரன் சூரியனிடமிருந்து 12 டிகிரி தொலைவில் இருக்கும். அதுவே 12 டிகிரி தள்ளி இருக்கும் போது பிரதமை திதி முடிவடையும்.
நாம் அமாவாசை திதியில் ஒருவர் பிறந்தால் அவருக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என நிறைய கேள்விபட்டிருப்போம். ஆனால், அமாவாசை திதிக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் பிறந்தாலும் அதே போன்ற எதிர்மறை பாதிப்புகள் ஒருவரின் வாழ்க்கையில் உண்டாகலாம். ஆனால் இந்த எதிர்மறை விளைவுகள் அமாவாசை மற்றும் பிரதமை என்ற இரண்டு தினங்களிலும் முழுமையாக ஏற்படாது. திதி சந்தி எனப்படும் அமாவாசை முடிவதற்க்கு 12 நிமிடங்கள் முன்பும், பிரதமை திதியில் முதல் 12 நிமிடங்களும் தான் சற்று ஆபத்தான நேரம். இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தை அதன் வாழ்க்கையில் மிக கடினமான போராட்டங்களையும், அதிகமான மன உளைச்சல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் குகை தோஷம் என்ற ஒரு நிலையால் பாதிக்கப்படுவார்கள். ஒரு குகை எப்படி இருட்டாகவும், காற்று, வெளிச்சம் ஏதுமின்றி இருக்குமோ அதுபோல ஒரு நிலைதான் இந்த குறிப்பிட்ட நிமிடங்களில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கையும் அமையும் என பொதுவாக நம்பப்படுகிறது. இந்த 24 நிமிடங்களை தவிர இந்த இரண்டு திதிகளில் மற்ற நேரங்களில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.
எப்போது சந்திரன் ஒரு ஜாதகத்தில் மிக பலவீனமடையும் என்பதை பார்க்கலாம்.
முதலில் சந்திரனும், சூரியனும் ஒரே நட்சத்திரத்தை கடக்கும்போதும் அல்லது ஒரே நட்சத்திர காலில் இரு கிரகங்களும் நிற்கும் போதும், சந்திரன் அதிக அளவில் அஸ்தங்கம் அடையும்.
அடுத்து, சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே முன்னும் பின்னும் 3.20 டிகிரி இடைவெளி இருக்கும் போது, சந்திரன் மிக பாதிப்படையும். அதுவே அவை இரண்டுக்குமிடையே முன்னும் பின்னும், வெறும் ஒரு டிகிரி மட்டுமே இடைவெளி இருக்கும் போது, சந்திரன் மிக கடுமையான அளவில் பலமிழக்கும்.
சந்திரன் உச்சகட்ட பாதிப்படைவது இரு கிரகங்களும் ஒரே பாகையில் முன்னும் பின்னும் நிற்கும் போதுதான். இந்த நேரத்தை தான் திதி சந்தி என்று கூறுவோம். இந்த நிலை ஏறத்தாழ 12 நிமிடங்கள் அமாவாசை திதி முடிவதற்கு முன்பும் அதே 12 நிமிடங்கள் பிரதமை திதி தொடங்கிய பின்னும் நீட்டிக்கும்.
இந்த இடைப்பட்ட 24 நிமிடங்களில் குழந்தை பிறப்பதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். அதுமட்டுமல்ல, எந்த சுப காரியங்களும் இந்த நேரத்தில் செய்யாமல் இருப்பது மிக நல்லது.
சந்திரன்தான் மனோகாரகன். சந்திரன் சூரியனுக்கு அருகில் வரும் போது மிகவும் பலவீனம் அடைவதால் அந்த நேரத்தில் நம் மனதளவில் மிகப்பெரிய அளவில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். நம் சிந்திக்கும் ஆற்றல் அந்த நேரத்தில் குறைவதால், அது நாம் செய்யும் செயல்களில் நிச்சயம் எதிரொலிக்கும். மனநோய் உள்ளவர்கள் அமாவாசை காலங்களில் மிக அதிகமாக பாதிப்படைவதை நாம் பார்த்திருப்போம். இதற்கு காரணம் வானமண்டலத்தில் சந்திரன்-சூரியனிடம் ஏற்படும் நெருக்கம்தான்.
கிராமப்புறங்களில், ஒரு நோயுற்று, இறக்கும் தருவாயில் உள்ளவரை பார்த்து இந்த அம்மாவாசை தாண்டிவிட்டால் பிழைத்துக் கொள்வார் என சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு காரணம், அமாவாசை காலங்களில் நாம் மனதளவில் பலவீனமாக இருப்பதால், நம் மனம் உயிரை பிடித்து வைத்துக்கொள்ள தேவையான உத்வேகத்தை நம் உடலுக்கு தர முடியாமல் போகலாம் என்பதால்தான். நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும், அறிவுரைகளிலும், அறிவியல் பூர்வமான காரணங்கள் உண்டு என்பதையே இது நிரூபிக்கிறது.
இந்த குறிப்பிட்ட அமாவாசை பிரதமை திதி சந்தி ஏற்படும் காலமான 24 நிமிடத்தில் 12 லக்னங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.
ஒருவர் அமாவாசை மற்றும் பிரதமை நேரத்தில் மேஷ லக்னத்தில் பிறந்திருந்தால், அவர் கை கால்கள் அடிக்கடி மரத்துப் போகலாம். அத்துடன் அவருக்கு இதயம் சம்பந்தமான குறைபாடுகள் இருக்கும். அவருக்கு எவ்வளவு தான் சொத்துக்கள் இருந்தாலும், அதனால் அவருக்கு பெரிய அளவில் பலன்கள் இருக்காது. அவற்றை விற்க முயற்சித்தாலும், அது எளிதில் முடியாது. அத்துடன் லாபகரமாகவும் இருக்காது. அவருக்கு தாயுடன் நல்ல உறவு இருக்காது. அத்துடன் தாய்வழி உறவுகளின் ஆல் மிகப்பெரிய அளவில் சங்கடங்களை சந்திப்பார். அவரின் ஒவ்வொரு செயலிலும் ஒரு மந்தநிலை எப்பொழுதும் இருக்கும். பயணங்களின் போது அடிக்கடி விபத்துகளையும் சந்திப்பார். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தாலும், அவரால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு பெரிய நன்மைகள் எதுவும் கிடையாது.
ஒருவர் ரிஷப லக்னத்தில் பிறந்து இந்த குகை தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது கழுத்து மற்றும் தொண்டை பகுதிகளில் சில குறைபாடுகள் இருக்கும். முக்கியமாக தைராய்டு போன்ற குறைபாடுகள் அவரை எளிதில் தாக்கும். தொண்டையில் எப்போதும் ஏதோ சிக்கியுள்ளது போன்ற உணர்வு அவருக்கு எப்பொழுதும் இருக்கும். ஒரு சாதாரண பேச்சுவார்த்தையில் கூட மனநிலை பிழன்று உடலளவிலான வன்முறையில் இறங்கி விடுவார். பொதுவாக இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். உடன்பிறந்த சகோதர, சகோதரிகளிடம் நல்ல உறவு இருக்காது.
மிதுன லக்னத்தில் இந்த நேரத்தில் பிறந்திருந்தால், கல்வியறிவு சிறப்பாக இருக்காது. Slow Learners என்று அழைக்கப்படும் இவர்கள் எதையும் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுப்பார்கள். தன்னுடைய கருத்துக்களை மற்றவர்களிடம் தெளிவாகவும், தைரியமாகவும் கூற தயங்குவார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கே அவரைப் பற்றி முழுமையாக தெரியாது. எதையும் மூடி மறைத்து தன் செயல்களை பற்றி யாருக்கும் தெரியாமல் செய்து விடுவார்கள். மிக குறைந்த அளவே உணவு உண்ணும் பழக்கம் கொண்ட இவர்கள், தன் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை முழுவதும் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திப்பார்கள். தன் பேச்சு சாதுரியத்தால் மிகப்பெரிய பொய்களையும் எளிதாக கூறி மற்றவர்களை நம்ப வைத்து விடுவார்கள்.
அமாவாசை- பிரதமை திதியில் பிறந்தவர்கள் கடக லக்கினகாரர்களாக இருந்தால் எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். நல்ல விஷயங்களில் கூட அதில் உள்ள எதிர்மறை அம்சங்களை தேடி துருவி பார்ப்பார்கள். எதிலும் முடிவெடுப்பதில் அதிக காலதாமதம் செய்வார்கள். மிகக் கடுமையான வார்த்தைகளை ஒருவரின் முகத்திற்கு எதிரே கூறி அவர்களை காயப்படுத்தி விடுவார்கள். ஞாபக சக்தி குறைவாக உள்ள இவர்கள், பணமே பிரதானம் என்ற கொள்கையில் வாழ்பவர்களாக இருப்பார்கள். மனிதநேயம், சக உயிர்களை மதிப்பது எல்லாம் பணத்திற்கு பின்னரே என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இந்த திதி சந்தி காலத்தில் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் கால்கள், மற்றும் பாதங்களில் சில குறைபாடுகள் இருக்கும். சர்க்கரை நோய் போன்ற உடல்நலக் கோளாறுகளால் தன் கால்களை இழந்தவர்கள் இந்த அமைப்பில் பிறந்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. மனம் எப்போதும் தேவையில்லாத விஷயங்களை சிந்தித்து அலைபாய்ந்த நிலையிலேயே இருப்பதால் இவர்கள் தூக்கமின்மையாலும் அதிகம் பாதிப்படைவார்கள். தொடர்ந்து இவர்களால் இரண்டு மணி நேரம் கூட தூங்க முடியாது. தாம்பத்திய உறவில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்காது. இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் எழும். எதிர்மறை சிந்தனைகள் அதிகளவில் இவர்கள் இடத்தில் இருக்கும். கஞ்சம் என்ற சொல்லின் முழு உருவம் இவர்களே. மற்றவர்களுக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய பல முறை யோசிப்பார்கள்.
இந்த அமைப்பில் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கால்கள், முக்கியமாக முட்டி போன்ற உடல் உறுப்புகள் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படும். இவர்களுக்கு ஒரு நிலையான வருமானம் இருக்காது. இந்த அமைப்பில் பிறந்தவர்கள் சொந்தத் தொழில் எப்பொழுதும் இறங்கக்கூடாது. மிக எளிதில் ஏமாறுபவர்களாக இருப்பதால், மிகப்பெரிய நஷ்டத்துடன் தன் தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். தான் சம்பாதிப்பதை எல்லாம், தன் சொந்தங்களுக்காக வே முழுவதும் செலவிட்டு கடைசியில் தனக்கென்று ஒன்றுமே இல்லாமல் மிக பரிதாபமான நிலைக்கு இறுதியில் தள்ளப்படுவார்கள்.
இந்த அமைப்பில் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொடைப்பகுதி பலவீனமாக இருக்கும். அதனால் காலம் முழுவதும் தீராத கால் வலியால் அவதிப்படுவார்கள். வெளிநாடு தொடர்பான தொழில்களில் நஷ்டம் உண்டாகும். இவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்வதை தவிர்த்து விடுவது நல்லது. பெற்றவர்களால் இவர்களுக்கோ அல்லது இவரால் அவர்களுக்கும் எந்த பயனும் இருக்காது.
ஒருவர் அமாவாசை பிரதமை திதி சந்தியில் துலா லக்னத்தில் பிறந்திருந்தால், அவர் மூட்டுவலியால் அதிகம் பாதிப்படைவர். ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்யும் குணம்உள்ளவர்களாக இருப்பதால் எப்போதும் ஒருவித உடல் சோர்வு இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் போராடி உயர்ந்தாலும், ஒரே நாளில் அவை அனைத்தும் இழந்து, முதலில் இருந்து திரும்ப தொடங்க நேரிடும். இவர்களுக்கு மாமியாரால் பல பிரச்சினைகள் எழும். இவரின் அனைத்து முயற்சிகளுக்கும் அவர் குறுக்கே நிற்பார்.
இந்த அமைப்பில் தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் கடுமையான மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள். உலகில் எந்த ஒரு புதிய நோய் தோன்றினாலும், அதனால் முதலில் பாதிக்கப்படுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். இந்த உலகத்தில் ஒரு முடிவே இல்லாத போராட்டமான வாழ்வை விட மரணமே சிறந்தது என்ற மனநிலையில் இருப்பார்கள். தாம்பத்திய உறவு என்பதே இவர்களின் வாழ்க்கையில் சுத்தமாக இருக்காது. இல்லற உறவில் ஒரு சன்னியாசியாகவே வாழ்வார்கள். வாழ்க்கை மிக நன்றாக இருக்கும்போது, எந்த சமூக விரோத செயல்களும் செய்ய அஞ்ச மாட்டார்கள். அதுவே, சில தோல்விகளை சந்திக்கும் நேரத்தில் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
மகர லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த அமைப்பை கொண்டிருந்தால், வயிறு சம்பந்தமான குறைபாடுகளால் அதிகம் பாதிப்படைவர். அத்துடன் கடுமையான முதுகு மற்றும் கால் வலியால் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு தன் வாழ்க்கை துணையுடன் நல்ல உறவு இருக்காது. காலம் முழுவதும் இல்லற உறவிலிருந்து நிரந்தரமாக பிரிந்துவிட காரணங்களைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். ஆனாலும், அதைவிட்டு அவர்களால் வெளிவர முடியாது. இவர்கள் எந்த காலகட்டத்திலும் கூட்டுத் தொழிலில் ஈடுபடக்கூடாது.
ஒருவர் அமாவாசை பிரதமை திதியில் கும்ப லக்னத்தில் பிறந்திருந்தால், அஜீரண கோளாறுகளால் பாதிப்படைவார்கள். உடல் முழுவதும் ஒரு நிரந்தர வலி வாழ்க்கை முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். சொந்த தொழில் செய்பவராக இருந்தால், மிகப்பெரிய நஷ்டத்தை சந்திப்பார்கள் வேலையிலும் ஒரு நிரந்தரமில்லா நிலையே இருக்கும். இல்லற வாழ்க்கையில் இன்பமே இல்லாத நிலையே நீடிக்கும்.
12 மீன லக்னத்தில் பிறந்தவர்கள் எந்த அமாவாசை பிரதமை திதி ஷந்தி காலத்தில் பிறந்தவர்கள் ஆக இருந்தால், அவர்களின் முதுகெலும்பில் நிரந்தர குறைபாடு இருந்து, எப்போதும் வலியால் அவதிப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு அவசரமாக இருந்தாலும், சுறுசுறுப்பாக செயல்பட மாட்டார்கள்.. உயர் கல்வியில் தடைகள் ஏற்பட்டு அதை முழுவதுமாக முடிக்க மாட்டார்கள். இவர்கள் குழந்தை பெறுவது சற்று கடினமாக இருக்கும். செய்யும் தொழிலிலும் பணியிலும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
இப்பொழுது கூறிய அனைத்தும் பொதுவான பலன்கள் தான். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் சாதக பாதக நிலைகளால் இதில் சில மாற்றங்கள் ஏற்படலாம். சந்திரனின் அஷ்ட வர்க்க பலத்தை வைத்தே நாம் உண்மையான பலன்களை அறிய முடியும்.
ஒரு குழந்தை அமாவாசையில் பிறந்ததால் மட்டுமே அதற்க்கு வாழ்க்கை முழுவதும் எதிர்மறை பலன்களே நடக்கும் என்று கூறமுடியாது. அமாவாசை-பிரதமை திதிகள் சந்திக்கும் அந்த குறிப்பிட்ட 24 நிமிடத்தில் குழந்தை பிறப்பதை கண்டிப்பாக தவிர்த்து விடுதல் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கும், அந்த குடும்பத்தின் நலத்திற்கும் நல்லது. மிக துல்லியமாக கணக்கிட்டு, அந்த 24 நிமிடத்தில் குழந்தை பிறப்பு நடைபெறாமல் தவிர்த்து விடுவது மிக முக்கியம். அதுபோல ஒருவர் அமாவாசை-பிரதமை திதிகளில் பிறந்திருந்தாலும், அவரின் ஜனனம் அந்த 24 நிமிடங்களில் நிகழ்ந்திருந்தால்தான் நான் முன்பு கூறிய பலன்கள் நடக்கும். அந்த இரு தினங்களில் மற்ற நேரங்களில் பிறந்திருந்தால், அதனால் பாதிப்பு பெரியளவில் இருக்காது. அதனால், ஒருவரின் ஜாதகத்தை மிக துல்லியமாக கணித்தால்தான் அவர் அமாவாசை- பிரதமை திதி சந்தி நடக்கும் காலத்தில் பிறந்திருந்தால் பாதிப்புகள் உண்டாகுமா என முடிவு செய்ய வேண்டும். அப்படி ஒருவர் அந்த 24 நிமிட கால இடைவெளியில் பிறந்திருந்தால், அவர் காலம் முழுவதும் அதற்காக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சில தெய்வீக பரிகாரங்கள் மூலம் அந்த குறைபாட்டை முழுவதும் நிச்சயம் நீக்கிவிட்டு, அவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.
