Astrology Videos

மேஷம்: 2021-ஆம் ஆண்டு பலன்கள் – இருப்பதை சிறப்பாக செய்வதே குறிக்கோள்

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் 2021-ஆம் ஆண்டை தொடங்க போகிறோம். 2020-ஆம் வருடம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் சோகமான ஆண்டாக இருந்தது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் Corona Virus என்ற பெயரில் நம் அனைவரின் வாழ்க்கையையும் மொத்தமாக முடக்கி போட்டு விட்டது. நவீன கால மனித இனம் இந்த அளவு ஒரு சோதனையை சந்தித்ததில்லை. உடல் நலம் சீர் கெடுதல், வேலை இழப்பு, தொழில்கள் மொத்தமாக முடங்கிப்போன நிலை, பொருளாதாரத்தில் கடும் சிக்கல்கள், கல்வி வளர்ச்சி தடைபடுதல் என நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் நிச்சயம் பாதிக்கப்பட்டு இருப்போம். அதிலும் நடுத்தர வர்க்கமும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களும் அளவிடமுடியாத நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது.

மனித குலத்திற்கே மிக சோதனையான 2020-ஆம் வருடம் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. கடந்த வருட தொடக்கத்தில் கேது- சனீஸ்வரன்- குரு பகவான் கூட்டணி வரலாறு காணாத இழப்புகளை ஏற்படுத்தி விட்டது.

வரும் 2021-ஆம் ஆண்டில் அனைத்து பாகங்களில் இருந்தும், இழப்புகளில் இருந்தும், நாம் மொத்தமாக மீளப் போகிறோம். இந்த வருடமும் சனீஸ்வரன்- குரு பகவான்- கூட்டணி இருந்தாலும் 2020-ஆம் ஆண்டு போல அது மிக கடுமையான பலன்களை தராது என எதிர்பார்க்கலாம்.

மேஷம் 2021-ஆம் ஆண்டு பலன்கள்

ஆனால் ரிஷபத்தில் உச்சம் அடைந்துள்ள ராகுவும், விருச்சிகத்தில் உச்சம் அடைந்துள்ள கேதுவும் நிச்சயம் அசாதாரண நிகழ்வுகளை கொண்டுவரும் கடந்த காலங்களில் இந்த இரண்டு கிரகங்களும் அந்த இரண்டு ராசிகளில் வரும்பொழுது மிகப்பெரிய பேரழிவுகளையும் அதிக அளவில் மனித உயிர்கள் பலியையும் ஏற்படுத்தியது. இந்த புது வருடத்திலும், நாம் சில இடர்களை சந்திக்க நேரிடலாம்.

மகரத்தில் சனீஸ்வரன்- குருபகவான் இணைப்பு, இரண்டு நிழல் கிரகங்களின் உச்சம் அடைந்த நிலை நாடுகளுக்கிடையே போர், இயற்கைச் சீற்றங்களான கடும் வரட்சி, வெள்ளம், புயல் மற்றும் பொருளாதாரத்தில் சிக்கல்கள், மதக்கலவரங்கள் போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தலாம்.

ஆனால் இந்த பாதிப்புகள் 2020-ஆம் வருடத்தைப் போல உலக அளவில் இருக்காது என்பது சற்று நமக்கு நிம்மதி தரும் செய்தி. இந்த வருடம் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற போவதால் பல விசித்திர அரசியல் நிகழ்வுகளை நாம் காணப்போகிறோம். தேர்தல் நடைபெறும் காலத்தில் குரு பகவான் சனீஸ்வரன் ஏற்பட்ட கூட்டணியை விட்டு அதிசாரமாக கும்பத்திற்கு பெயர்ச்சியாக போவதால் தேர்தலின் போது எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் மாநிலம் அமைதியாக இருக்கும் என நம்பலாம்.

மேஷ ராசியை பொறுத்தவரை 2021-ஆம் ஆண்டு நன்மைகளும், சற்று எதிர்மறை பலன்களும் கிடைக்கும் வருடமாக இருக்கும். வருட ஆரம்பத்தில் குருபகவானும், சனீஸ்வரனும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால், தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். 10 -இல் குரு அமர்ந்தால் பதவி பறிபோகும் என்பது ஒரு பொதுவான ஜோதிட விதி.

அத்துடன் சனீஸ்வரனும் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் இணைந்து இருப்பது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு, தொழில் மற்றும் வேலை தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி அன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு அதிசாரமாக பெயர்ச்சியாக போவதால் அதிலிருந்து செப்டம்பர் மாதம் 14 -ஆம் தேதி வரை நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

தொழில் மற்றும் வேலையைப் பொறுத்தவரை இந்த வருடம் சற்று அதிக பணிச்சுமை இருக்கும். பணியிடத்திலும், தொழிலிலும் சில நெருக்கடிகள் உண்டாகலாம். பணியிடத்தில் சில புதிய எதிரிகள் தோன்றுவார்கள். மிக கவனமாக ஒவ்வொரு செயலையும் செய்வது இந்த வருடம் முழுவதும் நல்லது.

பொதுவாக மேஷ ராசியில் பிறந்தவர்கள் சற்று முன் கோபக்காரர்கள். எதிலும் குறைபாடுகளை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த உலகம் முழுவதும் குறைபாடுகள் நிறைந்ததே. இதிலும் 100% முழுமை என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த உண்மையை ஏற்க மாட்டார்கள். இதனால் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுடன் எப்பொழுதும் அவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த வருடம் முழுவதும் உங்களின் விருப்பத்தை மற்றவர்களின் மேல் திணிக்காமல் சற்று சமாதானமாக போனால், பெரிய அளவில் பிரச்சினைகளை பணி இடத்திலும், குடும்பத்திலும் தவிர்க்கலாம்.

பணியில் இடமாற்றத்தையோ, புதிய வேலையில் சேருவதையோ ஏப்ரல் மாதம் வரை தவிர்ப்பது நல்லது. அதுபோல செப்டம்பர் மாதம் முதல் வருட இறுதி வரை, பணி சம்பந்தமாக எந்த முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு 2021-ஆம் வருடம் சற்று நெருக்கடியான காலகட்டமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் எடுக்காமல், இருப்பதை சிறப்பாக செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுத்தால், பெரிதளவில் நஷ்டங்களை தவிர்க்கலாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கோ, புதிய முதலீடுகளை போடுவதற்கோ, அல்லது கூடுதல் பணியாளர்களை சேர்ப்பதற்கோ இந்த வருடம் உகந்த காலம் அல்ல.

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இல்லற வாழ்வில் இனிமையும், சில சங்கடங்களும் கலந்த வருடமாக இந்த ஆண்டு இருக்கும். மிகுந்த சகிப்புத் தன்மையுடன் குடும்ப உறவுகளை இந்த வருடம் முழுவதும் கையாளவேண்டும். சற்று கடுமையான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் அது குடும்ப உறவையும் பாதிக்கலாம். அதனால், செலவுகளை ஒரு கட்டுக்குள் வைத்து, ஆடம்பரங்களை இந்த வருடம் முழுவதும் தவிர்ப்பது நன்று.

குருபகவான் அதிசார கதியில் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் நடுப்பகுதிவரை சஞ்சரிக்கப் போவதால், அந்த நேரத்தில் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம். அதுபோல அந்த காலகட்டத்தில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும்.

காதலிப்பவர்களுக்கு இந்த வருடம் சாதகமான காலம் இல்லை. இயல்பிலேயே சற்று கடுமையாக பேசும் வழக்கம் கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்கள், தங்களின் மனம் கவர்ந்தவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிறிய கருத்து வேறுபாடுகள் கூட ஒரு நிரந்தர பிரிவினையில் கொண்டு விட்டுவிடலாம். அதனால் காதல் உறவை இந்த வருடம் முழுவதும் மிக கவனமாக கையாள வேண்டும்.

கல்வியிலும் மாணவ-மாணவியருக்கு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மிகச் சிறப்பான காலமாகும். கடுமையாக முயற்சிகள் செய்து படிப்பில் முழு கவனம் செலுத்தினால், நீங்கள் விரும்பும் உயர்கல்வி வாய்ப்புகள் நிச்சயம் உண்டாகும்.

வருட ஆரம்பத்தில் சனீஸ்வரனும், குருபகவானும் சாதகம் இல்லாத நிலையில் சஞ்சரிக்கப் போவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. உடல்நிலையில் சில அறிகுறிகள் தோன்றினால் முழு மருத்துவ பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சையை எடுப்பது மிக முக்கியம். உடல்நலத்தில் அதிக அக்கறை எடுக்க தவறினால், அதன் பாதிப்புகள் சற்று கடுமையாக இருக்கலாம். தினசரி உடற்பயிற்சி, தியானம் போன்றவைகளை இடைவிடாமல் செய்து, உங்கள் உடல் மற்றும் மன நலத்தை ஆண்டு முழுவதும் பார்த்துக் கொள்வது நல்லது.

வருடம் முழுவதும் வெளிவட்டார தொடர்புகளை தவிர்ப்பது நல்லது. உங்களின் சாதாரண பேச்சு வார்த்தைகள் கூட மற்றவர்களினால் தவறாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளதால், நட்பு வட்டாரத்திலும், மற்ற வெளி உலக தொடர்புகளிலிருந்தும் சற்று தள்ளி நிற்பது நல்லது. சமூக இடைவெளி உங்கள் உடல் மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் இந்த ஆண்டு மிகுந்த நன்மை பயக்கும்.

குரு பகவான் ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆறு மாதத்திற்கு சாதகமாக சஞ்சரிக்கப் போவதாலும், உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் உதவியால் அந்த காலகட்டத்தில் நீங்கள் புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் எடுத்தால் அது எளிதில் வெற்றி பெறும். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு தங்களின் சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பு இந்த வருடத்தில் நிச்சயம் கிடைக்கும். அதுபோல புதிய வாகனங்களை நீங்கள் வாங்க எண்ணி இருந்தால் அது ஏப்ரல் மாதத்திற்கு பின் நிறைவேறும். நீங்கள் மனம் விரும்பிய வாகனம் இந்த வருடம் நிச்சயம் உங்கள் கைவசம் ஆகும்.

மேஷம் 2021-ஆம் ஆண்டு பலன்கள்

இந்த வருடத்தில் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இருப்பதை சிறப்பாக செய்வதே உங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். புதிதாக எதை செய்தாலும் சில தடங்கல்களை சந்திப்பதை தவிர்க்க முடியாது.

வருட இறுதியில் குரு பெயர்ச்சி ஆனவுடன் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். அதுவரை எதிலும் அவசரப்படாமல் சற்று பொறுமை காப்பது நல்லது.

பொதுவாகவே மேஷ ராசியில் பிறந்தவர்கள் நிதி மேலாண்மையில் சிறந்தவர்கள். இந்த வருடம் முழுவதும் நீங்கள் பணத்தை கையாள்வதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில உடல்நல பாதிப்புகளை தவிர்க்க முடியாது என்பதால் உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை தவறாமல் புதுப்பித்து விடவும். இதுவரை ஏதும் உடல் நலம் சார்ந்த இன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் அதை உடனே செய்து விடவும். வருமுன் காத்துக் கொண்டால், பெரிய அளவில் பொருள் இழப்புகளை தவிர்த்து விடலாம்.

இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்க போகிறீர்கள். கண்ணும் கருத்துமாக இருங்கள். 2021-ஆம் வருடம் முழுவதும் உங்கள் உழைப்பை விதையாக்குங்கள். 2022-ஆம் வருடம் உங்கள் உழைப்பிற்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும். சற்று தாமதமானாலும் உங்களின் முயற்சிக்கு ஏற்ற வெகுமதிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 2021-ஆம் வருடம் முழுவதையும் எதையும் சற்று பொறுமையுடனும், அகலக்கால் வைக்காமல் கடந்தால், 2022-ஆம் வருடத்தில் மிகச் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இந்த வருடம் முழுவதும் கடவுளின் மேல் முழு நம்பிக்கை வைத்து உங்களின் கடமைகளை தவறாமல் செய்து வாருங்கள். இறைவன் அருள் உங்களுக்கு நிச்சயம் துணை நிற்கும்.