கண்டக சனியின் பாதிப்பாலும், கடந்த ஒரு வருடமாக குருபகவான் ஆறாமிடத்தில் மறைந்தாலும், 2020- ஆம் வருடம் முழுவதுமே கடக ராசியில் பிறந்தவர்களுக்கு கடினமான காலகட்டமாக இருந்திருக்கும். அத்துடன் தனுசில் சனீஸ்வரனுடனும், குருபகவானுடனும் கேது இணைந்து வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் தினசரி வாழ்க்கையை மொத்தமாக முடங்கிவிட நிலை., அதனால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார சிக்கல்கள், வேலை இழப்பு, தொழிலில் அளவிடமுடியாத நெருக்கடிகள், பிள்ளைகளினால் சில சஞ்சலங்கள், உடல்நலக் கோளாறுகள், தேவையில்லாத பணியிட மாற்றம், பணியில் இலக்குகளை எழிதில் எட்ட முடியாத நிலை, ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு தடைபடுதல் போன்று பல விதங்களிலும் குருபகவான் உட்பட முக்கியமான கிரகங்களின் சாதகமில்லாத நிலையால் கடக ராசியில் பிறந்தவர்கள் பல விதங்களிலும் 2020- ஆம் ஆண்டு முழுவதுமே பல தொல்லைகளுக்கு ஆளானார்கள்.
பல நெருக்கடிகளுக்கு இடையே வாழ்ந்து வந்த கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிக ஆறுதலாக இருக்கப்போகிறது. குரு பகவான் சாதகமில்லாத ஆறாம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி ஏழாம் இடமான மகரத்தில் அங்கே ராசி அதிபதி சனீஸ்வரனுடன் இணையப்போகிறார். பொதுவாக, மகரம் குரு பகவான் தன் பலத்தை இழந்து நீச்சம் அடையும் இடம். குரு பகவான், மகர ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக அளவில் அவரால் நற்பலன்களை கொடுக்க முடியாது.
ஆனால், இந்த முறை அதற்கு முழு விலக்கு. மகர ராசியில் அந்த ராசியின் அதிபதி சனீஸ்வரனுடன் இணைய போவதால் குருபகவானின் நீச நிலை நீங்கி அங்கே நீச்சபங்க ராஜயோகம் என்ற அற்புதமான பலன்களை அளிக்கும் நிலை ஏற்படப் போகிறது. அதனால், இந்த முறை கடக ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கூடுதலாக கிடைக்கும். குரு பகவானின் 7-ஆம் இடம் மிக பலன் பொருந்திய ஒன்று.
இந்த குரு பெயர்ச்சியினால் உங்களின் பல சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கப்போகிறது.. குறிப்பாக சொந்தத் தொழில் செய்பவர்கள் பணப்பற்றாக்குறையால் கடுமையாக அவதிப்பட்டு வந்த சூழ்நிலை மாறி இப்பொழுது உங்களுக்கு போதுமான பொருளாதார வசதிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த 2021 – ஆம் ஆண்டு மிக சாதகமான நேரம். ஆனால், அதை அவசரப்பட்டு செய்து விடக்கூடாது. கண்டக சனியால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம். புதிய முதலீடுகள் செய்யும்போதோ, அல்லது தொழிலை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கும் போதோ, அதை பலமுறை யோசித்தே செய்ய வேண்டும். பலவிதங்களிலும் ஆராய்ந்து உங்களுக்கு நன்மை ஏற்படும் என்றால் மட்டுமே அவற்றை செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் 2022 – ஆம் ஆண்டு உங்களுக்கு சற்று கடினமான காலமாக இருக்கலாம். அஷ்டம குருவும், கண்டகச் சனியும், உங்கள் தொழிலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால், வரும் வருடத்தில் செய்யும் முதலீடுகள் குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த குரு பெயர்ச்சியினால் அடுத்த ஒரு வருடம், தொழிலில் நல்ல முன்னேற்றம் தெரியும். அதற்கான புதிய வாய்ப்புகள் பிறக்கும்.
பணியில் இருப்பவர்கள் கடந்த கால நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு இப்பொழுது ஒரு நிம்மதியான மனநிலையை பெறுவார்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் தொல்லைகள் கூடுதலான வேலை நேரம், பணிச் சுமைகள், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு இல்லாத நிலைகள் இப்பொழுது மாறி வேலையில் உங்கள் மனம் விரும்பியபடி சாதகமான சூழ்நிலைகள் இனிமேல் தோன்றத் தொடங்கும்.
குடும்பத்தை விட்டு நெடுநாட்களாக, தொலைதூரத்தில் பணியாற்றியவர்களுக்கு இப்பொழுது குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வகையில் பணியிட மாற்றம் கிடைக்கும். உங்களின் இடமாற்றத்திற்கு இப்பொழுது நீங்கள் விண்ணப்பித்தால், உங்களுக்கு சாதகமான பதில் விரைவில் கிடைக்கும்.
கடந்த ஒரு வருடமாக கடக ராசியில் பிறந்தவர்கள் பணியில் இலக்குகளை அடைய முடியாமல், நிர்வாகத்தால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பீர்கள். ஆனால் அடுத்த வருடம் நீங்கள் எதிர்பார்த்தபடி திறம்பட செயல்பட அனைத்து வாய்ப்புகளும் உருவாகும். அதிகபட்ச பணிச்சுமைகளினால் உங்களால் கொடுக்கப்பட்ட வேலையை குறித்த நேரத்தில் செய்யமுடியாத நிலை மாறி, நீங்கள் இப்பொழுது அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் பணிச்சுமையும் விரைவில் வெகுவாக குறையும்.
நீண்ட காலமாக திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருந்த நிலை, கடக ராசியில் பிறந்து திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரும் 2021- ஆம் வருடம் சிறப்பாக இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகும் காலமாக இருக்கும். இப்பொழுது கடக கடக ராசியில் முழுமையான குரு பலன் வரப் போவதால் திருமணத்திற்கான அனைத்து தடைகளும் நீங்கி விரைவில் கல்யாணம் நடக்கும். அதற்கான முயற்சிகளில் நீங்கள் இப்பொழுது தீவிரமாக இறங்கினால் உங்கள் மனம் விரும்பியபடி உங்களின் வாழ்க்கை துணையை விரைவில் கை பிடிக்கலாம்.
காதலர்களுக்கு 2021-ஆம் வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும். நீங்கள் விரும்பியபடி உங்களின் பெற்றோர் சம்மதத்துடன் இப்பொழுது நீங்கள் மனம் விரும்பியவரை திருமணம் செய்ய ஒரு அற்புதமான நேரம் பிறந்து விட்டது. அதுபோல முதன் முதலில் காதலை வெளிப்படுத்த நீங்கள் வரும் டிசம்பர் மாதத்திற்கு பின் முயற்சிகள் எடுத்தால், நீங்கள் விரும்பியபடி ஒரு சாதகமான பதில் உங்கள் மனம் கவர்ந்தவரிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்.
கடந்த ஒருவருடமாக ஆறாம் இடத்தில் மறைந்து குருபகவானால், உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இந்த குரு பெயர்ச்சிக்கு பின்னர் உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எழுந்திருக்கவே முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தவர்களின் உடல்நிலையில் கூட நல்ல முன்னேற்றம் ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சையை எடுத்தால் இப்பொழுது அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.
மாணவ மாணவிகளின் கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். வரும் வருடம் நீங்கள் விரும்பிய கல்லூரியில் உயர் கல்வி பயில எளிதில் வாய்ப்புகள் அமையும். சற்று கூடுதல் கவனத்துடன் படித்தால் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.
உங்களின் பொருளாதாரத்தில் இருந்த கடுமையான நெருக்கடிகள் இப்பொழுது நீங்கி இந்த குரு பெயர்ச்சியினால் உங்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு வேண்டிய போதுமான பண வரவு நிலையாக இருக்கும்.
குரு பகவான் அமரும் இடத்தை விட அவர் பார்க்கும் இடங்கள் நன்கு வளப்படும். இந்தப் பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்கள் ராசிக்கு, 11, 1, மற்றும் 3 – ஆம் வீடுகளை பார்ப்பார்.
பதினொன்றாம் வீடு லாபஸ்தானம். இப்பொழுது உங்கள் ராசிக்கு 11 – ஆம் வீடான ரிஷபத்தில் குருபகவானின் பார்வை விழுவதால் உங்களின் செயல்கள் அனைத்தும் எளிதில் வெற்றியில் முடியும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். பணவரவில் இருந்த நெருக்கடிகள் மாறி, உங்களுக்கு தேவையான பொருளாதார வசதிகள் உண்டாகும். உங்களின் நியாயமான விருப்பங்கள் அனைத்தும் குருபகவானின் 11- ஆம் இட பார்வையால் நிச்சயம் நிறைவேறும்.
அடுத்து முக்கியமாக குருபகவானின் பார்வை ஒன்றாம் இடமான உங்கள் ராசியிலேயே படப் போகிறது. உங்கள் ராசியான கடகம் குரு பகவான் உச்சம் அடையும் வீடு. தான் உச்சமடையும் வீட்டின் மேல் குரு பகவானின் சுப பார்வையால் உங்களின் அனைத்து செயல்களிலும் மிகுந்த நேர்மறை ஆற்றல் வெளிப்படும். உங்களின் தோற்றத்தில் பொலிவும், செயல்களில் தன்னம்பிக்கையும் வெளிப்படும். குருபகவானின் பார்வையால் உங்கள் மன நிலையில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றி அவை நற்செயல்களால் வடிவம் பெறும். உங்களின் கருத்துக்களுக்கு உங்களை சுற்றியுள்ளவர்கள் நல்ல மரியாதை தருவார்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் உறவு நிலை நன்கு முன்னேறி, கடந்தகால கசப்புணர்வுகள் முழுவதும் மறைந்து விடும்.
அடுத்தது, குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான கன்னி ராசியை பார்க்கப் போகிறார். மூன்றாம் வீடு இளைய சகோதரர்கள், ஆன்மீகம், தகவல் தொடர்பு, மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்களை குறிக்கும். குரு பகவானின் மூன்றாம் இட பார்வையால் உங்கள் இளைய சகோதர சகோதரிகளிடம் உறவுநிலை நன்கு மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து நீங்கள் எதிர்பார்த்தபடி சொத்துக்கள் சுமூகமாக பங்கு பிரிக்கப்படும். உங்களின் பேச்சில் தன்னம்பிக்கை நிறைந்து மற்றவர்களை நீங்கள் சொல்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வைக்கும். ஆன்மீகத்தில் நல்ல நாட்டம் உண்டாகும். நீங்கள் நெடுநாட்களாக செல்ல விரும்பிய ஆலயங்களுக்கு வரும் ஆண்டில் நீங்கள் செல்வீர்கள்.
இந்த குரு பெயர்ச்சி, பாலைவனத்தில் கடும் வெயிலில் தாகத்தோடு நடந்து செல்பவர்கள் ஒரு நீர் நிரம்பிய சோலையை கண்டால் எந்த அளவு ஆனந்தத்தை தருமோ, அந்த அளவு உங்களுக்கு மகிழ்ச்சியை தரப்போகும் ஒன்றாக இருக்கப் போகிறது. வரும் 2021- ஆம் ஆண்டு உங்கள் கவலைகள் அனைத்தும் மறைந்து குருபகவானின் திருவருளால் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட போகிறது. ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் உங்கள் இல்லத்திற்கு அருகே உள்ள பழமையான சிவாலயத்தில், நவக்கிரக சந்நிதியில் குருபகவானையும், சனீஸ்வரரையும் தவறாமல் தரிசித்து வரவும்.
கண்டக சனியின் பாதிப்புகள் முழுவதும் மறைந்து அடுத்த ஒரு வருடம் மிக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போவதால் சரியாக திட்டமிட்டு, அதற்கான சரியான உழைப்பை செலுத்தி குருபகவானின் பேரருளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.