Astrology Videos

மிதுனம் குரு பெயர்ச்சி 2020: எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

மிதுனம் குரு பெயர்ச்சி 2020: எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்களை விரிவாக பார்க்கலாம்.

12 ராசிகளிலேயே மிக அதிக அளவில் பலவிதங்களிலும் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கண்டகச்சனி, அதைத் தொடர்ந்து வந்த அஷ்டம சனி என மிதுன ராசியில் பிறந்தவர்கள் மிக அதிக அளவில் வேதனைகளையும், வலிகளையும் சந்தித்து கொண்டு காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களை ஒப்பிடும்போது 2020 – ஆம் ஆண்டு சற்று பரவாயில்லை என்ற நிலைதான். குரு பகவான் தன் சொந்த வீட்டில் ஏழாம் இடத்தில் அமர்ந்ததால் சனீஸ்வரனால் ஏற்பட்ட தொல்லைகளை சற்று குறைத்து இருப்பார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, நம்மில் பெரும்பாலோர் வீடுகளிலேயே முடங்கியதால் குருவின் கருணையால் ஏற்படும் நன்மைகளை முழுமையாக பெற முடியாமல் போய்விட்டது. அத்துடன், மிதுன ராசிக்கு ஏழாம் இடமான தனுசில் குரு- கேது சேர்க்கை ஏற்பட்டதால், ஏழாம் இடம் குருவால் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கணிசமாக குறைந்து விட்டது.

மிதுன ராசியில் பிறந்தவர்கள் பலர் தினசரி வாழ்க்கையை கண்ணீருடனும், அளவில்லாத வேதனையுடனும் கழிக்க வேண்டிய நிலை. வேலை இழப்பு, தொழிலில் நஷ்டம், கணவர்- மனைவி உறவு சீர் கெடுதல், கடுமையான நோய்களின் தாக்கம், சில வீடுகளில் பிள்ளைகளால் மனக் குழப்பங்கள், எதிலும் ஒரு தேக்கநிலை என்று மிதுன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை மிகக் கடினமாக மாறிப்போய்விட்டது. இதற்கெல்லாம் விடிவு வராதா, இன்னும் எத்தனை காலம் இந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற கேள்விகள் தான் மிதுன ராசியில் பிறந்த கிட்டத்தட்ட அனைவரிடமும் இருந்து கேட்கிறது.

உங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். வரும் 2021 – ஆம் வருடம் நீங்கள் பல கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும். மகரத்தில் இணையப் போகும் அஷ்டம குருவும், அஷ்டம சனியும், வாழ்க்கையின் அனைத்து கடுமையான பாடங்களையும் கற்றுத் தரப் போகிறார்கள். இதை நான் உங்களை பயமுறுத்துவதற்காக கூறவில்லை. ஆனால் நீங்கள் எதிர்வரும் கடினமான காலகட்டத்தை எப்படி மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கை.

உங்கள் தொழிலில் சில நஷ்டங்களை சந்திப்பதை தவிர்க்க முடியாது. அதனால் புதிய முதலீடுகள் என்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். புதிதாக தொழிலை விரிவுபடுத்த கடன்களையும் வாங்கக்கூடாது. செய்யும் தொழிலை மூடி விடாமல் அதை எப்படியாவது தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில்தான் உங்களின் முழு கவனம் இப்போது இருக்க வேண்டும். அதை உங்களிடம் தற்போது இருக்கும் பொருளாதாரங்களை வைத்து மட்டுமே நிர்வகிக்க வேண்டும். புதிதாக கடன்களை வாங்கினால், நீங்கள் மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரலாம்.

அடுத்த ஒரு வருடம் பணவரவில் சில சிக்கல்கள் இருக்கும் ஆதலால், உங்களின் நிதி தேவைகளுக்கான ஒரு சரியான திட்டத்தை தயார் செய்து கொள்ளுங்கள். புதிதாக தொழிலை விரிவு செய்வதையோ, புதிய பணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது அடுத்த ஒரு வருடம் கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும். வரும் வருடத்தில் கடுமையான சவால்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு காத்திருக்கிறது. அதனால் அகலக்கால் வைக்காமல், இருப்பதை தக்க வைப்பதே உங்களின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பணியிடத்தில் ஏற்படும் தொடர் நெருக்கடிகளால், சிலர் வேலையை விட்டுவிட்டு ஏதாவது சொந்தத் தொழிலை தொடங்கலாம் என்று இப்பொழுது யோசிக்கலாம். ஆனால் இதுபோன்ற நெருக்கடியான காலகட்டங்களில் நம்மை சற்று விபரீதமாக யோசிக்க வைத்து சிக்கலில் மாட்டி விட்டு விடும். இது சொந்தமாக தொழில் தொடங்கவோ அல்லது இருக்கும் வேலையை விட்டு விடுவோ ஏற்ற நேரம் அல்ல. பணியிடத்தில் ஏற்படும் தொல்லைகள் அனைத்தையும் பொறுமையாக சந்தித்துக் கொண்டு அடுத்த ஒரு வருடத்தை எப்படியாவது ஓட்டிவிட வேண்டும் என்பதே உங்களின் ஒரே நோக்கமாக இப்பொழுது இருக்க வேண்டும்.

பணியிடத்தில் உங்கள் கண்கள், காதுகள், வாய் அனைத்தையும் இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையிலும் எதிர்வினையாற்றாதீர்கள். ஆபீஸ் பாலிடிக்ஸ் இல் இருந்து முழுவதுமாக தள்ளி இருங்கள். அடுத்த ஒரு வருடம் உங்கள் வேலையில் மட்டுமே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நீங்கள் தவறாக ஒரு அடி எடுத்து வைத்தாலும், அந்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் எதிர்மறை கிரக நிலைகளில் உங்களை பெரிய சிக்கல்களில் மாட்டி வைத்து விடலாம். உங்களைச் சுற்றி கண்ணிவெடிகள் பல புதைக்கப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடனும், எச்சரிக்கையுடனும் வைக்க வேண்டும் வேலையில் இடமாற்றத்தை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். ஊதிய உயர்வையோ, பணி உயர்வையோ அல்லது பணியில் உங்களின் திறமையான செயல்களுக்கு உரிய அங்கீகாரத்தையோ நீங்கள் அடுத்த ஒரு வருடம் எதிர்பார்க்க முடியாது. அதனால் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி உங்களின் கடமையை மட்டும் சரியாக செய்து வரவும்.

அடுத்த ஒரு வருடம் உங்கள் உடல் நலத்தில் மிக அதிக அளவில் கவனம் செலுத்தவும். சிறிய உடல்நிலை கோளாறுகளை கூட அலட்சியப்படுத்தாமல் தகுந்த மருத்துவ சிகிச்சையை காலம் கடத்தாமல் எடுக்கவும். முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு, உடலில் எந்த குறைபாடுகளும் வராமல் கவனமாக இருக்கவும்.

அடுத்த இரண்டு வருடங்கள் சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் ஆதலால், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை, முக்கியமாக அடுத்த ஒரு வருடத்திற்கு, இரு சக்கர வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தை உபயோகப்படுத்தினால், விபத்துக்களில் இருந்து தப்பிக்கலாம். அதுபோல நெடுந்தூரப் பயணங்களுக்கு, சாலையை உபயோகிப்பதை தவிர்க்கவும். உங்களின் வீட்டில் உள்ள குளியலறை கவனமுடன் பயன்படுத்தவும். ஈரமான இடங்களில் கவனமாக கால் வைக்கவும். முக்கியமாக வயதில் முதிர்ந்த மிதுன ராசியில் பிறந்தவர்கள் குளியலறையை பயன்படுத்தும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான விருச்சிகத்தில் கேது உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், சில உடல்நல கோளாறுகளை தவிர்ப்பது கடினமாக இருக்கலாம். குறிப்பாக கேதுவின் 6 – இட சஞ்சாரத்தால் மிதுன ராசியில் பிறந்தவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கூடுமானவரையில் அடுத்த ஒரு வருடம் நீங்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே வெளியே செல்ல நேரிட்டாலும் சமூக இடைவெளியை கவனமாக கடைபிடியுங்கள். சிறிய அறிகுறிகள் தென்பட்டாலும், அதற்கான சோதனையை உடனே செய்து அது மேலும் பரவாமல் உகந்த தடுப்பு நடவடிக்கைகளை உடன் எடுத்தால் நோயின் தாக்கம் கடுமையாவதை தவிர்க்கலாம்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, அடுத்த வருடம் நீங்கள் கடுமையான பணப்பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம். அத்தியாவசிய செலவுகளை தவிர, ஆடம்பரங்களை முழுவதுமாக தவிர்த்து விடுவது நல்லது. மிகப்பெரிய அளவில் 2021- ஆம் ஆண்டு முழுவதும் பணப்பற்றாக்குறை ஏற்படலாம் என்பதால் ஒரு ரூபாய் செலவழிப்பதற்கு முன்னும் அது தேவையா என்பதை பலமுறை யோசித்து செய்யவும். உங்களின் அவசரத் தேவைகளுக்காக கடன் வாங்குவதையோ, நகைகளை அடமானம் வைப்பதையோ தவிர்க்கவும். அப்படி இல்லை என்றால் கடன்களை திருப்பி கொடுப்பதில் பல சிரமங்கள் ஏற்படலாம்.

அடுத்த ஒரு வருடம் குரு பலன் இல்லை என்பதால், மிதுன ராசியில் பிறந்தவர்கள் திருமணத்தை 2021-ஆம் ஆண்டு இறுதி வரை தள்ளிப் போடுவது நல்லது. பொதுவாக அஷ்டம சனி காலத்தில் திருமணம் செய்வது நல்ல பலன்களை தராது.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் அது தொடர்பான மருத்துவ உதவிகளை எடுப்பதை அடுத்த ஒரு வருடம் தள்ளிப் போடலாம். தற்பொழுது நிலவும் சில கடுமையான எதிர்மறை கிரக அமைப்புகளினால், குழந்தைப் பேறுக்கான முயற்சிகளில் தோல்விகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அவற்றைத் தவிர்த்து பொருளாதார நஷ்டங்களையும், மற்றும் மன உளைச்சல்கள் ஏற்படாமல் இருக்க இது போன்ற முயற்சிகளை அடுத்த ஒரு வருடம் தள்ளிப் போடுவது நல்லது.

குருபகவான் தான் அமரும் இடத்தை விட, தான் பார்க்கும் இடத்திற்கு அதிக பலன்களைத் தருவார், குருபகவான் உங்களின் ராசிக்கு எட்டாம் வீடான மகரத்தில் அமர்ந்து அங்கிருந்து உங்கள் ராசிக்கு12, 2, மற்றும் 4-ஆம் வீடுகளைப் பார்ப்பார்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டை பார்ப்பதால் தேவையில்லாத செலவுகள் குறையும். நீங்கள் வரும் ஆண்டு முழுவதும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், அதற்கு நல்ல பலன்கள் உண்டாகும். 12 – ஆம் வீட்டில் குரு பார்வை படுவதால் நீங்கள் சில திட்டமிட்ட முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அடுத்த ஒரு வருடம் உங்களின் பணத்தை பாதுகாப்பான முறைகளில் முதலீடு செய்வது நல்லது. பங்குச் சந்தை போன்ற யூக அடிப்படையிலான முதலீடுகள் உங்களுக்கு பலத்த நஷ்டத்தை உண்டாகலாம்.

பன்னிரண்டாம் வீடு வெளிநாடு தொடர்பான பயணங்களையும் குறிப்பதால் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அயல்நாடு சென்று வர வாய்ப்புகள் கிடைக்கும்.

அடுத்தது, குருபகவான் தன் ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் ஆகிய இரண்டாம் இடமான கடக ராசியைப் பார்ப்பார். குரு பகவானின் ஏழாம் பார்வை மிக விசேஷமான ஒன்று.அதி அற்புத ஆற்றல் நிறைந்த அந்த பார்வையின் பலனால் உங்களுக்கு தேவையான பொருளாதாரங்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும். அஷ்டம சனியின் தாக்கத்தால் நிதி நிலையில் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டாலும், குரு பார்வை அந்த சிக்கல்களை சரிப்படுத்தி உங்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற போதுமான பண வரவு உண்டாகும். ஆனால், அடுத்த இரண்டு வருடத்திற்கு நீங்கள் ஆடம்பரமாக எந்த செலவும் செய்யாமல் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம். அங்கே குருபகவானின் பார்வை விழப்போவதால், உங்களின் பேச்சிற்கு மற்றவர்களிடம் உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இதுவரை நீங்கள் கூறுவதை அலட்சியம் செய்தவர்கள் கூட இப்பொழுது உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள். ஆனாலும் சனீஸ்வரனும் உங்களின் வாக்கு ஸ்தானத்தை பார்க்க போவதால், வார்த்தைகளை மிக கவனமுடன் கையாள வேண்டும். உங்களின் சில எதார்த்தமான வார்த்தைகள்கூட எதிரில் இருப்பவர்களை மிககடுமையாக காயப்படுத்தி விடலாம். அதனால் அடுத்த இரண்டு வருடங்களும், தேவைக்கு மட்டுமே உங்களின் வாயை திறப்பது நல்லது. அத்துடன் சுற்றியுள்ள அனைவரிடமும் தேவையில்லாத உரையாடல்களை தவிர்த்து,எப்பொழுதும் அமைதியாகவே இருப்பது உங்களை வீண் சிக்கல்களில் இருந்து நிச்சயம் காப்பாற்றும்.

அடுத்தது உங்கள் ராசிக்கு 4 – ஆம் வீடான கன்னி ராசியை குரு பகவான் 9 – ஆம் பார்வையால் பார்க்க போகிறார். நான்காம் பாவம், தாய், நிலம், வாகனம், கல்வி, நெருங்கிய உறவினர்கள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறிக்கும். நான்காம் இடத்தை குருபகவான் பார்க்கப் போவதால் உங்கள் தாயின் உடல்நலன் நன்கு முன்னேற்றம் அடையும். அவருக்காக செய்யும் மருத்துவ செலவுகள் வரும் வருடத்தில் கணிசமாகக் குறையும். தாய்வழி சொந்தங்களுடன்இருந்த கசப்புணர்வுகள் மறைந்து அவர்களுடன் உள்ள உறவு நன்கு மேம்படும்.

மிதுனம் குரு பெயர்ச்சி 2020 Gemini Guru Transit November 2020

விவசாய நிலங்களினால்,நல்ல ஆதாயம் கிடைக்கும். நிலம், பூமி, மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் எளிதில் நடக்கும். கல்வி சம்பந்தப்பட்டமுயற்சிகள் எளிதில் வெற்றி அடையும். புதிதாக வாகனங்கள் வாங்கவும் வாய்ப்புகள் உருவாகும். ஆனால் இப்பொழுது அஷ்டம சனியும் நடப்பதால் புதிதாக வாகனங்கள் வாங்குவதை தவிர்ப்பது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்லது.

அடுத்து வரும் இரண்டு ஆண்டுகள் அஷ்டம சனியின் தாக்கத்தால் சற்று கடுமையான எதிர்மறை பலன்களை கொண்டுவரும். குறிப்பாக 2021-ஆம் ஆண்டு அஷ்டம குரு,மற்றும் அஷ்டம சனியின் பாதிப்பால்பல நெருக்கடிகள் உண்டாகலாம். அடுத்த வருட இறுதியில் நடைபெறவிருக்கும் குரு பெயர்ச்சிக்குப் பின் அஷ்டம சனியின் தாக்கம் முழுவதும் குறைந்து உங்கள் வாழ்க்கையில் பல நற்பலன்கள் ஏற்படத் தொடங்கும். கடந்த நான்கு வருடங்களில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் 2022- ஆம் ஆண்டு பிறந்தவுடன் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். 2022-ஆம் ஆண்டில் குருபகவான் உங்கள் ராசிக்கு மிக அதிர்ஷ்டகரமான ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கப் போவதால் நீங்கள் அதுவரை சந்தித்த இழப்புகள் அனைத்தும் ஈடு செய்து விட முடியும்.

அடுத்த ஒரு வருடத்தை மிகுந்த சகிப்புத் தன்மையுடனும்,பொறுமையுடனும்,கடந்து வாருங்கள். 2022-ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் பல அற்புதமான மாற்றங்களை கொண்டுவரும் வருடமாக இருக்கும்.

சனிபகவானும், குருபகவானும் சேர்ந்து கொடுக்கப்போகும் சில கடினமான பாடங்களை நல்ல அனுபவமாக ஏற்றுக்கொண்டு நீங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள உங்களின் மன உறுதியை திடமாக கொண்டு அவற்றை இறைவன் அளித்த பரிசாக ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள். உங்களுக்கான பொற்காலம் விரைவில் பிறந்து உங்கள் கண்ணீர், கவலைகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டு ஒரு ஆனந்தமான காலம் உங்களுக்காக விரைவில் பிறக்கப்போகிறது. அதுவரை,இறைவன் உங்களுக்கு நல்லதே செய்வார் என்ற திடமான நம்பிக்கையுடன் 2021-ஆம் ஆண்டை மிகுந்த மன உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என உறுதியாக நம்புங்கள்.