Temple Videos

ரிஷபம் குரு பெயர்ச்சி 2020: ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு

ரிஷபம் குரு பெயர்ச்சி 2020: ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு வரும் குரு பெயர்ச்சிக்கு பின்னர் கிடைக்கப்போகும் பலன்களை பார்க்கலாம்.

12 ராசிகளில் இந்த குரு பெயர்ச்சியினால் அதிக அளவு நன்மை அடையப் போகிறவர்கள் ரிஷப ராசியில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டத்தில் இருந்து முழுவதுமாக இப்பொழுது வெளிவர போகிறார்கள். எதற்கும் ஒரு எல்லை உண்டு, எதற்கும் ஒரு முடிவு உண்டு. கடந்த ஆறு ஆண்டுகளாக கண்டக சனியாளும், அதைத்தொடர்ந்து அஷ்டம சனியின் தாக்குதல்களாலும் வாழ்க்கையை மொத்தமாக சூனியமான நிலை. பல வருடங்களாக உழைத்து உருவாக்கிய அனைத்தும் கடந்த ஆறு வருடங்களில் மொத்தமாக உங்களை விட்டுப் போயிருக்கும். நெருங்கிய சொந்தங்கள், நட்புகள், உடன் பணிபுரிவோர் அனைவரும் உங்களை கைவிட்டிருப்பார்கள். கிட்டத்தட்ட நெருப்பாற்றில் நீந்தி வந்த மனநிலை கடந்த ஆறு வருடங்களில்.

ஆனால், உங்கள் வலிகள், வேதனைகள் அனைத்தையும் இப்பொழுது மொத்தமாக துடைத்தெறிய போகிறீர்கள். எப்படி கடந்த ஆறு வருடங்களாக யார் உதவியும் இல்லாமல் உங்களின் கடினமான, காலங்களை கடந்து வந்தீர்களோ, அதுபோல அடுத்து வரும் வருடங்களில் நீங்கள் தனியாகவே உங்களின் கோட்டையை மறுபடியும் பிரம்மாண்டமாக கட்டி எழுப்ப போகிறீர்கள். என்ன ஒரு வித்தியாசம் என்றால் கடந்த ஆறு வருடங்களில் கடவுள் கூட உங்களுக்கு துணை நிற்கவில்லை ஆனால், வரப்போகும் காலங்களில் இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிட்டும். அத்துடன் அனைத்து கிரகங்களும் உங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு. நன்மை செய்யும் நிலையில் இருக்கப் போகின்றன.

வேலை இழப்பு, தொழிலில் நஷ்டம், உறவினர்களிடம் மனக்கசப்பு, தேவையில்லாத பணியிட மாற்றங்கள், ஊதிய உயர்வு, பணி உயர்வு கிடைக்காமல் இருந்தால், உடல்நல கோளாறுகள், மனசோர்வு, கையில் அன்றாட தேவைகளுக்கு கூட பணம் இல்லாத நிலை என உங்களை வாட்டி வதைத்த அனைத்து எதிர்மறை நிகழ்வுகளும் இப்பொழுது மொத்தமாக மாறப்போகிறது.

நாம் யாருக்கு என்ன துரோகம் செய்தோம், நமக்கு ஏன் இந்த நிலை என கடந்த ஆறு வருடங்களில் நீங்கள் அழுது புலம்பாத நாளில்லை. ஒவ்வொருநாள் காலையும் ஏன் விடிகிறது என்ற கலக்கம். எழும்போதே அந்த நாளின் சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று அடிவயிற்றில் ஒரு இனம் புரியாத வேதனை போன்ற அனைத்து வலி நிறைந்த அனுபவங்களும் வரும் மாதங்களில் காற்றில் பறக்க போகின்றன.

உங்களுக்கென்று இப்போது ஒரு புது விடியல் பிறக்க போகிறது. இப்பொழுது உங்களுக்கென்று ஒரு புத்தம் புதிய உலகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது. இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கவலைகள், கண்ணீர் என்பது அறவே கிடையாது. கடந்த காலங்கள் கொடுத்த வலியும், வேதனையும் நிறைந்த அனுபவங்கள் உங்களை புடம் போட்ட தங்கமாய் இப்பொழுது மிளிரச் செய்யப்போகிறது.

ரிஷப ராசி சுக்கிரனின் வீடு. அழகு, நளினம், கலைநயம், மற்றவர்களுக்கு எதையும் எதிர்பார்க்காமல் உதவும் குணம், எளிதில் உணர்ச்சி வசம் படும் மனநிலை அனைத்தும் சுக்கிரனின் அம்சங்கள். 12 ராசிகளில் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்கள் தன்னலம் பாராமல் மற்றவர்களுக்கு உதவுவார்கள். ஆனால், உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களால் அதிகளவு காயப்பட்டு இருப்பார்கள். அவர்களின் இரக்க குணத்தை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் மற்ற ராசிகளில் பிறந்தவர்களை விட, ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சற்று சகிப்புத் தன்மை அதிகம் வாய்ந்தவர்கள். தன் சோகங்களை தனக்குள்ளே புதைத்து கொண்டு அதனால் சுற்றியுள்ளவர்கள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வார்கள். அவர்களின் இரக்க குணத்தை, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை மற்றவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டாலும், அவற்றையெல்லாம் மறந்து மீண்டும் மீண்டும் தங்களுக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு கூட நன்மையை மட்டுமே செய்வார்கள்.

உங்களின் நற்குணங்கள், நல்ல செயல்கள் அனைத்தும் விதையாக விழுந்து இப்பொழுது துளிர்விட்டு ஆல்போல் வளரப் போகிறது. அடுத்து வரும் பல வருடங்கள் உங்களுக்கு அதிக அளவில் நன்மைகள் மட்டுமே நடக்கும்.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்பார்கள். ஆம் உங்களை விட்டு அனைத்து துன்பங்களும் இந்த குருபெயர்ச்சி யுடன் ஓடப் போகிறது. இந்த பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிக்கு யோக காரகனாகிய சனீஸ்வரனுடன், குரு பகவான் இணையப் போவது மிகச் சிறப்பான நிலை. குரு பகவான் சனீஸ்வரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான மகரத்தில் இணையப் போவதால், அங்கே குருபகவானுக்கு நீச பங்க ராஜ யோகம் என்ற சிறப்பான நிலை ஏற்பட்டு, உங்களுக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்கப் போகிறது.

முக்கியமாக, உங்கள் தொழிலில் மற்றும் பணியிலிருந்த சிக்கல்கள் இப்பொழுது முழுவதுமாக தீர்ந்துவிடும்., தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, இப்பொழுது அது மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பும். தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய நிதி உதவிகள் இப்பொழுது எளிதில் கிடைக்க தொடங்கும். வசூலாகாத நிலுவைத் தொகைகள் வரும் மாதங்களில் முழுவதுமாக திரும்ப வரத்தொடங்கும். உங்கள் தொழிலில் புதிய முயற்சிகளை தொடங்க சாதகமான நேரம் இப்பொழுது வந்துவிட்டது. அதனால் இப்போது முழு நம்பிக்கையுடன் அதற்கான செயல்களை தொடங்கலாம். தொட்டதெல்லாம் நஷ்டம் என்ற நிலைமாறி அனைத்தும் வெற்றி என்ற நிலை உங்களுக்கு அடுத்த பல வருடங்களுக்கு நீடித்து நிற்க போகிறது.

அதுபோல பணியில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணி உயர்வு ஊதிய உயர்வு, மேலிடத்தில் நல்ல உறவு நிலை, கடமைகளை சரியாக உரிய நேரத்தில் முடிப்பது போன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

புதிதாக வேலை தேடுபவர்கள் தாங்கள் விரும்பியபடி வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

திருமணமாகாதவர்களுக்கு இப்பொழுது முழுமையான குருபலன் வரப் போவதால், திருமண முயற்சிகள் எளிதில் வெற்றி கிட்டி அவர்கள் இல்லற வாழ்வில் வரும் வருடத்தில் அடியெடுத்து வைப்பார்கள்.

அதுபோல, நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் இப்போது குழந்தை பேறு கிடைக்கும்.

குழந்தை பெறுவதில் உடல் ரீதியாக சில குறைபாடுகள் இருந்தால், இப்போது அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை எடுப்பதன் மூலம் நல்ல பலன் கிடைத்து உங்கள் வீட்டில் விரைவில் மழலைச் செல்வம் தவழும்.

மாணவ மாணவிகள் தங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் எளிதில் விரும்பியபடி நிறைவேறும். வெளிநாட்டில் உயர்கல்வி பெற விரும்புபவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கும்.

இதுவரை சோர்ந்திருந்த மனமும், உடலும் இனிமேல் புத்துணர்ச்சி பெற்று அதனால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சில நீண்ட நாள்பட்ட உடல்நல கோளாறுகளை நீங்கள் இப்பொழுது தகுந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்ய முயன்றால் அதற்கு நல்ல பலன் கிடைத்து உங்கள் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் உண்டாகும்.

குருபகவான் தான் அமரும் இடத்தை விட தான் பார்க்கும் இடத்தை அதிகம் வளப்படுத்துவார். இப்பொழுது நிகழப்போகும் பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 1, 3 மற்றும் ஐந்தாம் வீடுகளை பார்ப்பார்.

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க போவதால், நீங்கள் மற்றவர்களை விட கூடுதல் பலன் பெறுவீர்கள். குருவின் அருட் பார்வையால் உங்கள் தோற்றம் முழுவதுமே மாறப்போகிறது. எப்பொழுதும் கவலையுடனும், எதையோ பறிகொடுத்தது போன்ற சோர்வுடனும் கடந்த பல ஆண்டுகளாக வளைய வந்த நீங்கள் குரு பகவானின் அற்புத சக்தி வாய்ந்த பார்வையால் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க போகிறீர்கள். உங்களின் சோர்வு, கவலைகள் அனைத்தும் மறைந்து. இப்பொழுது முழுமையாக உங்களை உற்சாகம் தொற்றிக்கொள்ள போகிறது. குருவின் பார்வையால் ஏற்படப்போகும் நேர்மறை பலன்கள் இப்பொழுது உங்கள் முகத்திலும், உங்கள் செயல்களிலும் அற்புதமான மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.

அடுத்தது, குரு பகவானின் சுப பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான கடகத்தில் விழப்போகிறது. கடகம் குரு பகவான் உச்சம் அடையும் வீடு. அந்த இடத்தை இப்பொழுது அவர் பார்க்கப் போவதால் உங்கள் குடும்பத்தில் சகோதர சகோதரிகளிடம் உள்ள உறவு நிலை நன்கு மேம்படும். குருவின் பார்வையால் பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சுகமான முறையில் தீர்வு ஏற்படும்.

ரிஷபம் குரு பெயர்ச்சி 2020 Taurus Guru Transit November 2020

அடுத்தது குருபகவான் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் வீடான கன்னி ராசியை ஒன்பதாம் பார்வையால் வலுப்படுத்துவார். இதனால் நீங்கள் கடந்த காலத்தில் செய்த அனைத்து நற்செயல்களுக்கும் உரிய பலன் இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும். ஐந்தாம் வீடு குழந்தைகளையும் குறிப்பதால், இப்பொழுது உங்களின் குழந்தைகளினால் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் உண்டாகும். அவர்களின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குருவின் திருவருளால் மிக விரைவில் குழந்தை செல்வத்தை பெறுவார்கள்.

இந்த குரு பெயர்ச்சியினால் நீங்கள் மிக அதிக அளவில் நன்மைகளை பெற போகிறீர்கள். உங்களில் கடந்தகால இழப்புகள் அனைத்தும் வரும் காலங்களில் ஈடு செய்யப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் இனிமேல் வெற்றியாக போகும் காலம் என்பதால் உங்களின் தேவைகளுக்காக மிக சரியாக திட்டமிட்டு அதை செயலாக்க கடுமையாக உழைத்தால் வரப்போகும் பொற்காலத்தின் பலன்களை நீங்கள் முழுமையாகப் பெற முடியும்.