Astrology Videos

ஒரு திருமணம் ஏன் விவாகரத்தில் முடிகிறது – சில ஜோதிட ரீதியான காரணங்கள் – Astrological Factors for Divorce

ஒரு திருமணம் ஏன் விவாகரத்தில் முடிகிறது – சில ஜோதிட ரீதியான காரணங்கள் – Astrological Factors for Divorce

ஒரு திருமணம் விவாகரத்தில் முடிய ஜோதிட ரீதியான சில முக்கியமான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவரின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் மிகத் துல்லியமாக கணித்து விடுவார்கள். திருமணம் விவாகரத்தில் முடிவதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒருவரின் திருமணம் நிச்சயம் பிரிவினையில் முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பதை அவரின் ஜாதகத்தை வைத்து சரியாக கண்டுபிடித்து விடமுடியும்.

ஒரு ஜாதகத்தில் எட்டாம் வீட்டின் நிலையும், பன்னிரண்டாம் வீட்டின் நிலையும் அந்த ஜாதகரின் திருமண முறிவிற்க்கான வாய்ப்புகள் உள்ளதா என தெளிவாக காட்டி விடும்.

முக்கியமாக சூரியன், செவ்வாய், சனீஸ்வரன், ராகு மற்றும் கேது ஒரு ஜாதகத்தில் ஏழாம் வீட்டோடோ அல்லது எட்டாம் வீட்டோடோ சம்பந்தப்பட்டிருந்தால் அந்த ஜாதகரின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழலாம். குறிப்பாக, இல்லற ஸ்தானமான ஏழாம் வீட்டோடு, சூரியன் சம்பந்தப்பட்ட இருந்தால், திருமண வாழ்க்கையின் அமைதி நிச்சயம் கெடும். திருமண வாழ்க்கைக்கு முக்கியமான கிரகமான சுக்கிரன் 2, 4, 7, 9 – ஆம் வீடுகளில் அமர்ந்து அங்கே சூரியனோடு இணைந்திருந்தால், அங்கு விவாகரத்து நடைபெற வாய்ப்புகள் மிக அதிகம். திருமண வாழ்வில் அடுத்த முக்கியமான கிரகமான செவ்வாய் ஒரு ஜாதகத்தில் 1-ஆம் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ அமர்ந்து அங்கே சுபக்கிரகங்களின் பார்வை கிடைக்காவிட்டால். அந்த நிலையில் தம்பதிகள் இருவரும் வாழ்நாள் முழுவதும் வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளிலும் காலம் கடத்துவார்கள்.

சனீஸ்வரன் ஒரு ஜாதகத்தில் 1 மற்றும் ஏழாம் இடங்களோடு தொடர்பில் இருந்தால், அந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் எப்போதும் சந்தேகக் கண்களோடு பார்ப்பார்கள். அவர்கள் இருவரிடமும் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியமான பரஸ்பர நம்பிக்கை துளியும் இருக்காது.

அதுபோல, ராகு ஒரு ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் அமர்ந்தாலோ, அல்லது தொடர்பில் இருந்தாலோ, தம்பதிகளுக்குள் தாம்பத்திய உறவில் சிக்கல்கள் ஏற்பட்டு, அவர்களுக்கு அதில் முழு திருப்தி வராது. இதனால் அவர்கள் திருமணத்தை தாண்டிய உறவுகளை நாடுவதால் அவர்களுக்குள் பிரிவினை வர வாய்ப்புகள் அதிகம்.

ராகுவைப் போலவே கேதுவும் திருமணம் தொடர்பான பாவங்களில் ஒரு ஜாதகத்தில் தொடர்பு கொண்டிருந்தால், திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் எழும். கேதுவின் தாக்கத்தால் கணவன் மனைவியிடையே எப்பொழுதுமே ஒரு நெருக்கமான உறவு இருக்காது. ஊருக்காகவும், குடும்பத்திற்காகவும் மட்டுமே வெளி உலகில் அவர்கள் தம்பதிகளாக வாழ்வார்கள்.

ஒரு திருமணம் ஏன் விவாகரத்தில் முடிகிறது - Sayeeram Madipakkam Chennai best Astrologer

தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை ஏற்படும் போது, அது நிரந்தர பிரிவினையில், விவாகரத்தில் முடியுமா என்பதை கணிக்க முக்கியமாக ஒரு மூன்று விஷயங்களை பார்க்க வேண்டும்.

முதலில், தம்பதிகளுக்கு என்ன மகா தசை நடக்கிறது என பார்க்க வேண்டும். அதிகபட்சமாக சுக்கிர தசை ஒருவருக்கு 20 வருடங்கள் நீடிக்கும். குறைந்தபட்சமாக சூரியதசை ஒருவரின் வாழ்வில் ஆறு வருடங்கள் நடக்கும். ஒருவரின் ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட கிரகம் மிக சாதகமான நிலையில் இருந்து, அந்த கிரகத்தின் மகா தசை நடக்கும் காலங்களில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்து வெளிவந்து விட முடியும். அதுவே, அந்த கிரகம் ஜாதகத்தில் சாதகமில்லாத நிலையில் இருந்தால், திருமணம் மட்டுமல்லாமல், அந்த ஜாதகர், அந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அடுத்து, ஒரு ஜாதகத்தில் சனீஸ்வரன், ராகு மற்றும் கேதுவின் நிலைகள். இந்த 3 கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் மிக நல்ல பலன்களையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் பெறுவார். அதுவே இந்த 3 கிரகங்களும் சாதகம் இல்லாத நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் வாழ்வில் அளவிடமுடியாத துன்பங்களை சந்திப்பார்.

திருமண வாழ்க்கைக்கு முக்கியமான மற்ற கிரகங்களான சுக்கிரன், குரு பகவான், மற்றும் செவ்வாய் சற்று சாதகம் இல்லாத நிலையில் இருந்தாலும் அவர்கள், சனீஸ்வரன், ராகு கேதுவை போல அந்த அளவு சிரமப்படுத்தமாட்டார்கள்.

ஒருவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிகிறது என்றால் அவர்களின் ஜாதகத்தில், சனீஸ்வரன், ராகு, கேது போன்ற மூன்று கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் பங்கு நிச்சயம் இருக்கும்.

பொதுவாகவே, ஏழாம் இட அதிபதியோ, அல்லது ஏழாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களோ, அதிக அளவில் நற்பலன்களை கொடுக்க மாட்டார்கள். அதுவே அவர்கள் சாதகமில்லாத நிலையில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல சங்கடங்களை ஏற்படுத்தி விடுவார்கள்.

முக்கியமாக, ஏழாம் இடத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் மகா தசை அல்லது தசா புக்தி நடைபெறும் காலங்களில் அவைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுபோல ஏழாம் வீட்டின் அதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தாலும் அங்கு விவாகரத்திற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டோடு தொடர்பில் இருந்தால், அங்கே தம்பதிகளுக்குள் நிரந்தர பிரிவினை வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. ரிஷபம் மற்றும் தனுசு ராசியில் அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திப்பதற்கு முதல் காரணம் சுக்கிரன் அந்த ராசிகளுக்கு ஆறாம் இட அதிபதியாக இருப்பதுதான்.

இதிலே, தனுசு ராசியில் பிறந்தவர்கள், ரிஷப ராசியில் பிறந்தவர்களை விட திருமண வாழ்க்கையில் மிக அதிக அளவில் சவால்களை சந்திக்க நேரிடும் காரணம் என்னவென்றால், அந்த ராசிக்கு சுக்கிரன் ஆறாம் இடம் மட்டுமல்லாமல் 11-ஆம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பதே. ஆறாம் இடத்தை விட, ஒருவரின் திருமண வாழ்க்கையை பாதிக்கும் பலம் 11 – ஆம் வீட்டிற்கு உண்டு. அத்துடன் தனுசு ராசிக்கு ஆறாம் வீடான ரிஷபத்திற்கு ஆறாம் வீடு மற்றொரு சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம். அதனால் தனுசு ராசியில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கையில் மற்ற ராசிகளில் பிறந்தவர்களை விட அதிக அளவில் சோதனைகளை சந்திப்பார்கள். ஆனால், சில கிரகங்கள் சாதகமான நிலையில் அவர்கள் ஜாதகத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பெரும் அளவு பாதிப்படையாமல் தப்பித்து விடுவார்கள். என்றாலும், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை ஒரு சவாலான விஷயம்தான்.

அடுத்தது, ஆறாம் வீட்டின் அதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் அங்கே விவாகரத்து நடைபெற வாய்ப்புகள் மிக அதிகம். அதிலும், ஆறாம் அதிபதியின் தசா புக்தி காலங்களில் திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

அதுபோல ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீட்டின் அதிபதி சாதகமாக இல்லாமலிருந்தால், அந்த கிரகத்தின் தசா புத்தி காலங்களிலும் தம்பதிகளுக்குள் பிரிவினை ஏற்படும். ஏனென்றால் இரண்டாம் பாவம், ஏழாம் வீட்டிற்கு அஷ்டம ஸ்தானம்.. இதன் காரணத்தால் இரண்டாம் வீட்டில் அதிபதியின் தசா புக்தி காலங்களில் திருமண வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்படும். இரண்டாம் வீட்டின் அதிபதி சாதகமாக இல்லை என்றால், அந்த கிரகத்தின் தசா புத்தி காலங்களில் திருமணத்தை தவிர்ப்பது மிக நல்லது.

அடுத்தது ஏழாம் வீட்டின் அதிபதி பன்னிரண்டாம் வீட்டோடு தொடர்பில் இருந்தால் அங்கு தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்படலாம். இது நிரந்தர விவாகரத்து போலல்லாமல், தம்பதிகள் இருவரும் தொலை தூரத்தில் வசிக்கும் நிலை ஏற்படும். முக்கியமாக வெளிநாட்டில் நீண்ட காலம் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர்களின் ஜாதகத்தில் இந்த நிலை இருக்கும். அதுபோல ஏழாமிட அதிபதியும் பன்னிரண்டாம் இட அதிபதிகள் ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை பெற்றாலும் தம்பதிகளுக்குள் இதுபோன்ற பிரிவு உண்டாகும்.

அதுவே, ஏழாம் வீட்டின் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், அந்த தம்பதிகளுக்குள் எப்பொழுதும் கருத்து வேற்றுமை இருக்கும். இருவரும் 24 மணி நேரமும் ஒருவரின் மேல் ஒருவர் குறை கூறிக்கொண்டு வாக்குவாதங்களிலேயே காலம் தள்ளுவார்கள்.

அதுபோல, ஆறாம் வீட்டின் அதிபதியும், நான்காம் வீட்டின் அதிபதியும் ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை அடைந்தால், அந்த தம்பதிகள் எப்பொழுதும் எலியும், பூனையும் ஆகவே இருப்பார்கள், ஒரே வீட்டில் வசித்தாலும் அவர்களிடையே நீண்டகாலத்திற்க்கு பேச்சுவார்த்தை கூட இல்லாத நிலை உண்டாகும்.

ஆறாம் வீடு ஏழாம் வீட்டிற்க்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால், ஆறாம் வீட்டின் அதிபதியின் தசா புத்தி காலங்களில் தம்பதிகளுக்குள் சில சங்கடங்கள் ஏற்பட்டு அது விவாகரத்தில் முடிய வாய்ப்புகள் உண்டு.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும் அல்லது சந்திரனும் இட அதிபதி அமர்ந்துள்ள இடத்திலிருந்து 6,8 அல்லது 12 – ஆம் வீட்டில் இருந்தால், அந்த ஜாதகரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியலாம்.

அதுபோல சந்திரனோ, அல்லது சூரியனோ ஏழாம் வீட்டில் சுக்கிரனோடு சேர்ந்து இருந்தால் அங்கே நிம்மதியான மணவாழ்க்கைக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

பொதுவாகவே, திருமணத்திற்கு முன் தம்பதிகள் இருவரின் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்தால் எதிர்காலத்தில் விவாகரத்து போன்ற நிரந்தர பிரிவினைகளை முழுவதுமாக தவிர்த்து விட முடியும். ஆனால். ஜாதக பொருத்தங்கள் பார்க்கும் பொழுது, மேலோட்டமாக நல்ல பொருத்தங்கள் இருப்பதுபோல் தோன்றுவதால் பல திருமணங்கள் அதிக பொருத்தங்கள் இருந்தாலும் விவாகரத்தில் முடிவடைகின்றன. மற்றும் சிலர் சில தீவிர ஜாதக குறைபாடுகளை சில பரிகாரங்கள் மூலம் தீர்வு ஏற்படுத்திக் கொள்ளலாம் என திருமணத்திற்கு முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் சில ஜாதக குறைபாடுகளை எந்தக் காரணத்தாலும் நீக்கிவிட முடியாது. சில நேரங்களில் நம் கடந்தகால கர்மாவை அதற்குரிய பலன்களை அனுபவித்தே கழிக்க முடியும்.

மேலோட்டமாக பொருத்தங்கள் பார்த்து திருமணத்தை முடிவு செய்வதால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஜோதிடர்களையும், ஜோதிடத்தையும் குறை சொல்வார்கள். ஆனால், முழுமையாக ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து, அதிலுள்ள நிறை குறைகளுக்கு ஏற்றவாறு நமக்கு பொருத்தமான ஒருவரை வாழ்க்கைத் துணையாக ஏற்க வேண்டும். வெறும் 10 பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமே எதிர்கால திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு உத்திரவாதம் தராது.

ஒருவரின் ஜாதகத்தில் திருமணம் தொடர்பான கிரக நிலைகள் பாதகமாக இருந்தால், அவருக்கு, ஒரு சிறப்பான திருமண அம்சம் உள்ளவரை தேர்ந்தெடுப்பதுதான் ஒரு நல்ல பரிகாரமாக இருக்க முடியும். ஒருவரின் திருமண வாழ்க்கையை பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர் ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள் இருந்தால் நிச்சயம் அந்த திருமண வாழ்வில் எதிர்காலத்தில் எந்த பாதிப்புகள் வராது

அதனால்தான் ஒரு திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்று அந்தக்காலத்தில் சொல்லி வைத்தார்கள். திருமணம் நடப்பதற்கு முன் அனைத்து கிரக அம்சங்களையும் இருவரின் ஜாதகத்தில் அலசி ஆராய்ந்து, எந்த சமாதானத்தையும் ஏற்காமல் வெறும் பத்து பொருத்தங்களை மட்டும் பார்க்காமல் முடிவு செய்தால் அங்கே விவாகரத்து என்ற பிரச்சினைக்கே இடம் இருக்காது. அடுத்த பதிவில் சரி செய்யக் கூடிய நிலையில் உள்ள விவாகரத்து குறித்த கிரகநிலைகள் பரிகாரங்களை விரிவாகக் கூறுகிறேன்.

ஒரு திருமணம் ஏன் விவாகரத்தில் முடிகிறது - Sayeeram Madipakkam Chennai best Astrologer